கோவை: கோவையில் இருசக்கர வாகன உற்பத்தி பாகங்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காட்டூர் பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாநகர் காட்டூர் பிள்ளையார் கோவில் வீதி அருகில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருசக்கர வாகனத்திற்கு தேவையான பேட்டரிகள், ஆயில்கள், உட்பட அனைத்து விதமான உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன மேலும் வெல்டிங் வைக்கும் பணிகளும் இங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் மாலை சுமார் 4:30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக கடையில் இருந்த பணியாளர்கள் வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
கடையில் பேட்டரி, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆயில்கள் போன்றவை இருந்ததால் வேகமாக தீ பற்றி அதிக அளவு கரும்புகை வெளியேறியது. மேலும் பேட்டரிகள் மற்றும் சில உதிரிபாகங்கள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கடைகள் மற்றும் குடியிருப்புகளின் மேல் விழுந்து அங்கும் தீ பரவியது. இதனால் இங்கு பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் முதலில் வந்த காவல்துறையினர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதி மிகவும் குறுகலான பகுதி என்பதால் தீயணைப்பு துறை வாகனங்கள் உள்ளே வருவதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதை தீயணைப்பு வாகனங்கள் தெருவிற்குள் வருவதற்கு வழிவகை செய்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
5 தீயணைப்பு வாகனங்கள் மாநகராட்சியின் தண்ணீர் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது. அது மற்றும் இன்றி தீயணைப்பு கிரேன் வாகனமும் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் ஆனது மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தீ அணையாமல் பற்றி கொண்டே இருந்ததால் இந்திய விமானப்படை அதிகாரிகள், இந்திய கப்பற்படை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரசாயனங்களை கொடுத்து தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த கடை முழுவதும் ரசாயனங்கள் தெளிக்கப்பட்டன.
இதற்கிடையே கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்தனர் என்றும் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்ததாக தெரிவித்தார்.
தீயணைப்பு துறையில் தண்ணீர் வாகனங்கள் மட்டுமின்றி விமானப்படை அதிகாரிகள் மூலம் ரசாயனம் கலந்த தெளிப்பான்களும் கொண்டுவரப்பட்டது என்றார். இதில் எந்த ஒரு உயிர் பாதிப்பும் இந்த சம்பவத்தில் ஏற்படவில்லை என்றும்
பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அறிவுரைகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது என்றார்.
இரண்டரை மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டு விட்டது, தொடர் விசாரணை மேற்கொண்டு எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கிறோம் என்றார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் பேட்டி அளிக்கையில், இந்த சம்பவம் குறித்து தெரிந்த உடனே குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் வந்து விட்டோம் என்றார். உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுமக்களையும் இங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டோம் என்றும் அருகில் இருந்த வீடுகளில் சிலிண்டர்கள் போன்று எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அகற்றி உள்ளோம் என்றார்.
ரசாயன உதவிகள் தேவைப்பட்டதால் இந்திய விமானப்படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க உதவினார்கள், ஏறத்தாழ சுற்று பகுதியில் 35க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளோம் ஃபோம் பஸ்ட் இயந்திரம் விமானப்படை மூலம் கொண்டுவரப்பட்டது முழு விசாரணைக்கு பின்பு எதனால் தீ பிடித்தது என்று தெரிய வரும் என்றார்.
அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினாலே இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

