கோவை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் கவர்னன்ஸ் பெல்லோஷிப் (KGF) திட்டத்தை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்துள்ள பட்டதாரி மாணவர்களுக்கு பயிற்சிக்கான அடையாள அட்டைகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், தனது தொகுதியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஈசாவுடன் இணைந்து பசுமை கவுண்டம்பாளையம் திட்டத்தையும், தொகுதியில் உள்ள பிரச்சினைகளை கட்சி உறுப்பினர்கள் மூலம் கண்டறிந்து தீர்வு காணும் வகையில் ஜனநாயகன் பாஸ்போர்ட் திட்டத்தையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, படித்த பட்டதாரி மாணவர்கள் அரசு நிர்வாகம், அரசின் திட்டங்கள், மக்கள் நலப்பணிகள் மற்றும் பொதுக் கொள்கைகள் குறித்து அறிந்துகொண்டு, அவற்றில் நேரடியாகப் பணியாற்றுவதற்கான பயிற்சி மற்றும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் KGF திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து கடந்த காமராஜர் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் முதற்கட்டமாக 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான நிகழ்ச்சி துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கனிமொழி சந்தோஷ் அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், “இதை ஒரு வாய்ப்பாக மட்டும் கருதாமல், கற்றுக்கொள்ளும் பாடமாகப் பாருங்கள். நீங்கள் என்னிடம் இருந்து கற்றுக்கொள்வதைவிட, உங்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளவுள்ளேன்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி சந்தோஷ், “இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். தமிழக அரசு எவ்வாறு செயல்படுகிறது, குடிமக்களின் பொறுப்பு என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் எனது தலைமையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரையும் தலைவர்களாக உருவாக்குவதே எனது குறிக்கோள்” என்றார்.






