Header Top Ad
Header Top Ad

உயிரிழந்தும் கை கொடுத்த மகன்; அரசிடம் உதவி கோரும் கோவை மூதாட்டி!

கோவை: உயிரிழந்த தனது மகன் சேமித்து வைத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தரக்கோரி மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. கருப்புப்பண ஒழிப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள மக்கள் பணிக்கப்பட்டனர். அதன்படி மக்கள் தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொண்டனர். இதற்கான கால அவகாசமும் நிறைவு பெற்றது.

ஆனாலும், ஒரு சிலர் தாங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மூலையில் வைத்திருந்த சேமிப்புப் பணம் கிடைக்கும் போது, அதனை எடுத்து வந்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மூதாட்டி ஒருவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரியுள்ளார்.

Advertisement

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற 79 வயது மூதாட்டி. இவரது மகன் செந்தில்குமார் கடந்த 2018ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனிடையே சமீபத்தில் மூதாட்டி தனது வீட்டை முழுமையாக சுத்தப்படுத்தி உள்ளார். அப்போது தனது மகன் ஒரு பையில் வைத்து சேமித்து வைத்த பழைய 500, 10,00 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஒரு பை இருந்துள்ளது. அதனுள் ரூ.15 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் மூதாட்டி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர், தொடர்ந்து மூன்று, நான்கு முறை மகன் சேமித்து வைத்த பணத்தை மாற்றித் தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு இந்த பணம் பயன்படும் என்றும் இதனை மாற்றித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Recent News