கோவையில் தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளை – வீடியோ காட்சிகள்

கோவை: கோவையில் தனியார் நகர பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி ரயில் நிலையம் அருகே தனியார் நகர பேருந்தை நிறுத்திய வழக்கறிஞர் ஒருவர் தனியாளாக நின்று தட்டிக்கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாநகரில் இயக்கப்படும் தனியார் நகர பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நகர பேருந்து ஒன்றில் காந்திபுரம் பகுதியில் இருந்து உக்கடம் வரை செல்ல அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வழக்கறிஞர் காந்திபுரம் பகுதியில் இருந்து தனியார் நகர பேருந்தில் ஏறி ரயில் நிலையம் செல்வதற்காக பயண சீட்டு கேட்டுள்ளார்.

அப்போது அரசு நிர்ணயித்த கட்டணமான ஏழு ரூபாய்க்கு பதிலாக, பத்து ரூபாய்க்கான பயணச்சீட்டை நடத்துனர் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கறிஞரும், “7 ரூபாய் கட்டணத்திற்கு எதற்காக பத்து ரூபாய் பயணச்சீட்டு கொடுக்கிறீர்கள்” என கேட்டார்.

அதற்கு அந்த பேருந்து நடத்துனர், “ரயில் நிலையத்திற்கான பயணக் கட்டணம் பத்து ரூபாய். அனைவருக்கும் இதுதான் கட்டணம்” என்றும் நடத்துனர் கூறவே ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர் ரயில் நிலையம் பகுதியில் பேருந்து பயணிகளை இறக்குவதற்காக நின்றபொழுது தானும் இறங்கி அந்தப் பேருந்தை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் குறிப்பிட்ட அந்தப் பேருந்தில் வழக்கமாக இதே போன்று தொடர்ச்சியாக அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இதுபோன்று தொடர் மோசடியில் ஈடுபட்டு வரும் அந்தப் பேருந்து நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தியதுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எச்சரித்து அனுப்பினர்.

கோவை மாநகரில் பெருவாரியான தனியார் பேருந்துகளில் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மெத்தனப்போக்கைக் கடைபிடிக்காமல் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp