கோவை: சிங்காநல்லூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த மறு கட்டமைப்பிற்கான கூட்டு நடவடிக்கை குழுவினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சிங்காநல்லூர், உப்பிலிபாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. அங்கு 960 அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுவரை இடித்து அகற்றப்படாத நிலையில் 3 கட்டிடங்கள் உள்ளன.
இடிக்கப்படாமல் உள்ள இந்த கட்டிடங்களில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வருகின்றனர். இங்கு பீளமேடு பகுதியில் மாணவிக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்பட்டு விடகூடாது.
எனவே இடிக்கப்படாமல் சிதிலமடைந்து உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி, சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.



