கோவை: கே ஜி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவை கே ஜி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வேலன் நகரை சேர்ந்தவர் யோகானந்தன் (வயது 31), இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 01) இரவு கோவை திருச்சி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த யோகானந்தனுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தொடர் சிகிச்சைக்காக கே ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயத்தோடு அனுமதிக்கப்பட்ட யோகானந்தனுக்கு கே ஜி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், ஜூலை 04-ம் தேதி யோகானந்தன் மூளைச் சாவு அடைந்ததை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர்.
மூளைச் சாவு அடைந்த யோகானந்தனின் மூத்த சகோதரி சகானா கே ஜி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
நிலைமையை உணர்ந்து சகானா, குடும்பத்தினரிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து எடுத்துரைத்தார். அதன் படி, குடும்பத்தினர் யோகானந்தனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து யோகானந்தனின் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில் கே ஜி மருத்துவமனை தலைவர் ஜி பக்தவச்சலம் மருத்துவமனை வளாகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட யோகானந்தனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
அனைத்துத் தொடர்ந்து, உயரிய மரியாதையுடன் யோகானந்தனின் உடல் இறுதி சடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.