கோவை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை பிரைம் ஸ்போர்ட்ஸ் அமைப்பு சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி கோவை கே.என்.ஜி., புதூர் பகுதியில் உள்ள லைஃப் ஸ்ப்ரிங் விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், சென்னை, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 25 மீட்டர், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் தூரங்களுக்கு பட்டர்பிளை, ஃப்ரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்ரோக், உள்ளிட்ட பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
Advertisement

இதில் நீச்சல் வீரர் வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வயது வாரியாக கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மூத்த நீச்சல் பயிற்சியாளர் ரகு போஸ் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகள், நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.
அதிருப்தி
போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர் (NCC வாசகர்கள்) கூறுகையில், ” குழந்தைகளுக்கான போட்டி முதலில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நடத்தப்படவில்லை . அதிகாலையில் சென்ற குழந்தைகள் இரவு வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர். அங்கு வந்திருந்த பெற்றோரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்” என்று நமது வாசகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.