கோவை: உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 1வது வீதியில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் உந்து நிலையம் உள்ளது. அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் அர்ஜூன்குமார் மற்றும் சுரேஷ்குமார் உயிரிழந்தனர். அவர்களது உடல் கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு அவர்களது குடும்பத்தினர் கூடி இருந்தனர். அவர்களை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், முறையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பாதாள சாக்கடைக்குள் இறங்க வேண்டாம் என்று நாங்கள் பலமுறை எச்சரித்திருக்கிறோம். மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகை இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பலியான பணியாளரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உடனடியாக அதுகுறித்து தெரிவிக்க இயலாது. தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை பெற்றுத்தர நிச்சயம் முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழக முதல்வர் ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க ஆணையிட்டுள்ளார். அந்தத் தொகையையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிர் திரும்பாது. இனி ஒரு உயிர் கூட இதுபோன்று போகக்கூடாது.
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் உள்ளன. அதை பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக்கூடாது.
மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடன் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய துணைத் தலைவர் கனிமொழி உட்பட பலர் இருந்தனர்.

