கோவை: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவையை சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் என்பவரும் அவரது குழுவினர் GROKR என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டலாம் என வாட்ஸ் அப் மூலம் தெரிந்தவர்களுக்கு தகவல்கள் பரப்பியுள்ளனர். அந்த தகவல்கள் பலருக்கும் பரவி உள்ளது.
இதை நம்பி முதலீடு செய்ய முன் வந்தவர்களை தனியாக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்துள்ளனர். பின்னர் தனித்தனியாக URL அனுப்பி GROKR என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி தனி log in கோடு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா நிறுவனம் என்பதால் பணத்தை டாலரில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், புதிய உறுப்பினர்கள் 1,000 டாலர் முதல் 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் லாபத்தை டாலராகவே அதே செயலியில் கொடுத்துள்ளது.
ஆனால் அந்த பணத்தையும் செயலியில் இருந்து எடுக்கவிடாமல் மீண்டும் முதலீடு செய்வதற்கு வலியுறுத்தியுள்ளனர். இதனால் அதிகம் லாபம் வருவதாக எண்ணி நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் பலர் முதலீடு செய்துள்ளனர். மேலும் அதில் உறுப்பினராக உள்ளவர்கள் அவர்களுக்கு கீழ் 25 ஆட்களை சேர்த்தால் அதற்கு தகுந்த லாபம் கிடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதை நம்பி ஏராளமான மக்களை சேர்த்துள்ளனர்.
லாபம் வருவதாக எண்ணி மக்கள் முதலீடு செய்த நிலையில், அவ்வப்போது புதிய ஸ்கீம்கள் எனக் கூறி கூடுதலாக மூதலீடு செய்ய வைத்துள்ளனர். இறுதியாக லாபத்துடன் தங்க நெக்லஸ் மற்றும் செயின் வழங்க உள்ளதாக கூறி முன்னதாக குழு தலைவர்களுக்கு மட்டும் தங்க நகைகளை வழங்கியுள்ளனர். அதனை பார்த்து மேலும் அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்துள்ளனர். இந்நிலையில் திடீரென செயலியின் log in நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் பணத்தை எடுக்க முடியாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் ஹேமத் பாஸ்கரை தொடர்பு கொண்ட போது ஏதும் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். தங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதே சமயம் அவர்கள் வேறு ஒரு குழு அமைத்து அதில் சேர்ந்து முதலீடு செய்ய வேண்டுமென கூறுவதாகவும் அதனை யாரும் நம்பிவிட வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



