கோவை: கோவையில் பாதுகாப்புத் துறை உற்பத்திக்கான தொழில்துறை மாநாடு நடைபெற்றது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தித் துறை சார்பில் தெற்கு மண்டல தர உறுதி மற்றும் தொழில்துறை மாநாடு நிலாம்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்பு உற்பத்தி துறை இணைச் செயலாளர் கரிமா பகத், கப்பற்படை அதிகாரி இக்பால் சிங் கிரேவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதன் அவசியத்தை இதில் அவர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும், காணொளி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்து பாதுகாப்பு உற்பத்தி துறை செயலாளர், சஞ்சீவ் குமார் கலந்து கொண்டு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சிறு குறு நடுத்தர தொழில் துறையினரின் பங்கு மற்றும் தர கட்டுப்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தென்னிந்திய அளவில் உள்ள தொழில்துறையினருடன் தரக் கட்டுப்பாட்டு அம்சங்கள் குறித்த ஆலோசனைகளைப் பரிமாறவும்,
பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தியில் தரக் கட்டுப்பாடு (Quality Control) மற்றும் தர உறுதி (Quality Assurance) ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில், பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில்துறை வல்லுநர்கள், தயாரிப்பாளர்கள், தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் கப்பற்படை அதிகாரிகள் உட்படப் பலர் பங்கேற்றனர்.



