கோவையில் உள்ள சிறைகளில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ரமேஷ் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள துணை சிறைச்சாலைக்கு சென்று அங்கு உள்ள சிறைவாசிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சிறைவாசிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கபடுகிறதா என்றும், அவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளான தங்குமிடம், குளியலறை, சமையல் கூடம், உணவின் தரம் மற்றும் இல்லத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள உரிய வசதிகள் செய்யபட்டுள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உரிய சட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது துணை சிறை அலுவலர் மற்றும் சிறை போலீசார் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைசாலைக்கு சென்று அங்கு உள்ள சிறைவாசிகளிடமும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, கலந்துரையாடினார். மேலும், தண்டனை சிறைவாசிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர் வருகைப்பதிவேடு குறித்த ஆவணம் மற்றும் இதர தொடர்பு உடைய ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொள்ளாச்சி துணை சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து மற்றும் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் உடன் இருந்தனர்.
மாலை 3.15 மணியளவில் கோவை ஒண்டிபுதூர் அருகில் அமைந்துள்ள அரசினர் மகளிர் காப்பகத்திற்கு சென்று அங்கு உள்ள இல்லவாசிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இல்லவாசிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கபடுகிறதா என்றும், அவர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளையும் கேட்டறிந்து, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசினர் மகளிர் காப்பக அலுவலர்கள் உடன் இருந்தனர்.



