கோவை: கோவையில் குடிபோதையில் வீடு மீது பீர் பாட்டில் வீசி ரகளை செய்து பெண்ணை மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி அருகே உள்ள ஓணாம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி பிரியா (31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார்.
இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபர்கள் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதேபோல், நேற்று முன்தினம் நந்தினி தேவி வீட்டில் இருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபர்கள் இருவரும் குடிபோதையில் கற்கள் மற்றும் பீர் பாட்டிலை நந்தினி பிரியா வீட்டு மீது வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை நந்தினி பிரியா தட்டி கேட்டபோது, இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் வீட்டின் கேட் மீது பீர் பாட்டிலை வீசி உடைத்தனர்.
இது குறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வடவள்ளி ஓணாம்பாளையத்தை சேர்ந்த விஜயராஜ்(26) மற்றும் பிரவீன் ராஜ்(26) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.