கோவை: கோவை அருகே காட்டுயானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த சோலைப்படுகை என்ற பகுதியில் நள்ளிரவில் மூன்று யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த யானைகள் மீண்டும் காட்டுக்குள் செல்ல முயன்ற நிலையில் இரண்டு யானைகள் வனத்திற்குள் சென்றது. ஒரு யானை மட்டும் அங்கிருந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் விழுந்தது. நீர் அதிகமாக இருந்ததால் யானை வெளியேற முடியாமல் உயிரிழந்தது.
உயிரிழந்த யானைக்கு சுமார் 35 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கிணற்றுக்குள் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர், மற்றும் மீட்புப்பணி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களையும் யானைகள் ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.