கோவையில் மின் வேலியை சிக்கி தவித்து கடந்து செல்லும் காட்டு யானைகளின் காட்சிகள் வைரலாகி வருகிறது !!!
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் குட்டியுடன் வந்த இரண்டு காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. பின்னர் மீண்டும் நேற்று காலை வனப்பகுதியை நோக்கி திரும்பி சென்றன.
முள்ளங்காடு பகுதியில் காட்டு யானைகள் வந்த போது, அப்பகுதியில் இருந்த மின்வேலியை யானைகள் தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. பின்னர் சமயோசிதமாக வெளியேறியது. மற்றொரு யானையால் அந்த வழியாக வெளியேற முடியாததால், மின் வேலியின் கம்பியை தாண்டிய படி வெளியேறியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல நேற்று மாலை உணவு தேடி சாடிவயல் பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை சென்றது. அப்போது சாடிவயல் செக்போஸ்ட் பகுதிக்கு சென்ற யானை, அங்கிருந்தவர்களை அந்த யானை துரத்தியது. இதனால் அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடி தப்பித்தனர். அந்த யானை அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வாகனத்தை தும்பிக்கையால் அழுத்தி தள்ளப் பார்த்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் போராடி அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ காட்சிகள்…