கோவை: ஓவிய பயிற்சி முகாமிற்கு சென்ற சட்டக் கல்லூரி மாணவியின் ஆடையை பார்த்து கேலி செய்ததாக பாதிக்கப்பட பாதிக்கப்பட்ட மாணவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று வீரபாண்டி அருகே உள்ள நாயக்கனூர் அண்ணாநகரை சேர்ந்த ஜனனி (வயது 20) என்ற இளம் பெண் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.
நான் டிப்ளமோ படித்துவிட்டு ஆங்கில மொழி பயிற்சியாளராக உள்ளேன். தற்போது ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன்.
எனது தாயார் கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 21 ஆம் தேதி கோவை பூ மார்க்கெட் பகுதியில் திசைகள் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஓவிய பயிற்சியை பங்கேற்க சென்றேன்.
பயிற்சி முடிந்த பிறகு மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டேன். அப்போது அங்கு நின்ற முத்துராமன் என்பவர் எனது உடையை பார்த்து ஆபாசமாக கிண்டல் செய்தார்.
இப்படி அரைகுறையுமாக வரக்கூடாது என்று கூறினார். நான் எவ்விதமான அரைகுறையுமான உடையும் இல்லாமல் இருந்தேன்.
ஆனால் நான் அணிந்திருந்த கையில் இல்லாத மேல் சட்டையை ஆபாச நோக்கத்தோடு பார்த்து எல்லோரும் முன்பாக அவர் அசிங்கமாக பேசினார்.
அதற்கு நான் அப்படி என்ன ஆபாசமாக உடை அணிந்து உள்ளேன் என்று கேட்டேன். அதற்கு அவர் தவறாக பேசினார். அவருக்கு ஆதரவாக சிலர் மேலும் என்னிடம் மோசமாக பேசி பொது இடத்தில் அவமானப்படுத்தினார்கள்.
மேலும் என்னை தாக்கும் நோக்கத்தோடு அந்த 6 பேரும் சேர்ந்து என்னையும் என்னோடு இருந்த நண்பர் பிரசாந்த் என்பவரையும் அடிக்க வந்தார்கள்.
அதோடு பிரசாந்த் கையில் இருந்த என்னுடைய செல்போனை பறிக்கும் நோக்கத்தோடு அந்த நபர்கள் பிரசாந்த் கையைப் பிடித்து இழுத்தார்கள்.
அதை தடுக்கச் சென்ற என்னிடத்திலும் மிக மோசமாக நடந்து கொண்டார்கள்.
பொது இடம் என்றும் பாராமல் பாலியல் ரீதியாக செய்கை செய்து தொல்லை செய்து அச்சுறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அதில் ஜனனி கூறியிருந்தார்.