கோவை: நேரு கல்லூரி விடுதி மெஸ்ஸுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
நேரு கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் நேரு கலை அறிவியல் கல்லூரி(தனியார்) இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன் தினம் இரவு விடுதி மாணவர்கள் விடுதி மெஸ்ஸில் சாப்பிட்ட போது உணவில் புழுக்களை பார்த்ததாக தெரிகிறது. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு நிலையில் மாணவர்களை உடனடியாக மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் பலரும் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் நேற்று இரவு விடுதிக்குள் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இது குறித்து கே.ஜி சாவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்று மெஸ்ஸை சோதனை செய்தனர். சோதனையின் அடிப்படையில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்கவில்லை பணிபுரியும் பணியாளர்களுக்கு தகுந்த மருத்துவச் சான்றிதழ் இல்லை சமையலறையில் போதிய வெளிச்சம் காற்றோட்டம் இல்லை பூச்சிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை சமையலறை ஸ்டோர் ரூம் உள்ளிட்ட பகுதிகளில் ஈக்கள் காணப்படுகிறது கழிவுநீர் முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவில்லை என்று தெரிய வந்ததை தொடர்ந்து அந்த தனியார் மெஸ்ஸுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இவற்றையெல்லாம் சரி செய்து உணவு சமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.



