Header Top Ad
Header Top Ad

கோவையில் லஞ்சம் வாங்கிய வனக்காவலர்கள் கையும் களவுமாகக் கைது!

கோவை: கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளன.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றன. குறிப்பாக இந்த வழியே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டைத்துரை, மன்னார்காடு, அகழி, சோலையூர் ஆகிய இடங்களுக்கும் அதிகபடியான வாகனங்கள் செல்கின்றன.

கனரக வாகனங்களிலும் பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும்.

Advertisement

மதுக்கரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேரள மாநிலத்தில் தோட்டம் வைத்துள்ளார். தோட்டத்திற்கு உரங்களுக்கான கோழி எருவுகளை பல்லடத்தில் இருந்து லாரி மூலம் 27ம் தேதி அனுப்பி வைத்துள்ளார்.

அப்போது இரண்டு சோதனை சாவடிகளிலும் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. மாங்கரை சோதனை சாவடியில் இருந்த வனக்காப்பாளர் செல்வகுமார் ஆயிரம் ரூபாயில் லஞ்சமும் அதேபோல் ஆனைகட்டி வனசோதனை சாவடியிலும் வனக்காவலர் சுப்ரமணியம் என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சமும் பெற்றுள்ளனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரிடம் அந்த ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையும் உரங்களுக்கான கோழி எருவுகளை எடுத்து செல்வதாகவும் அப்பொழுதும் சோதனை சாவடிகளில் லஞ்சம் பெறுவார்கள் என்று கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்துவிட்டு இரண்டு சோதனை சாவடிகளிலும் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.

அப்பொழுது மாங்கரை சோதனைச் சாவடியில் வன காவலர் செல்வகுமார் ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெறும்பொழுது அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

அதேபோன்று ஆனைகட்டி சோதனை சாவடியிலும் வனகாவலர் சதீஷ்குமார் என்பவர் லஞ்சம் பெறும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அதே சமயம் சுப்பிரமணியம் அங்கு வந்த பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரையும் பிடித்தனர்.

இதனை அடுத்து மூவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் பிரபுதாஸ், அறுமுகம் மற்றும் ஏடிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் 12 பேர் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News