கோவை: கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி அன்று 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கோவை பகுதியைச் சேர்ந்த நந்தா என்கிற நந்தகுமார் (22) மற்றும்
சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெர்மன் ராகேஷ் (24) ஆகியோரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நந்தகுமார் மற்றும் ஜெர்மன் ராகேஷ் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி., கார்த்திகேயன், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமாரிடம் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில் கலெக்டர் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான நந்தகுமார் மற்றும் ஜெர்மன் ராகேஷ் ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.


 
                                    
