கோவை: இருகூர் – சிங்காநல்லூர் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து சதி செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவையில் ரயில் மீது கல் எறிவது, தண்டவாளத்தில் கல் வைப்பது போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 22ம் தேதி இருகூர் – சிங்காநல்லூர் இடையே சூர்யா நகர் அருகே தண்டவாளத்தில் மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து கோவை ரயில்வே போலீசார் வடகோவை சீனியர் செக்சன் இன்ஜினியர் குணசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தனிப்படை போலீசார் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
அதில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்த சதி செய்தது, ஒண்டிப்புதூரை சேர்ந்த தினேஷ் (25), கோகுல் கிருஷ்ணன் (24), வினோத் (19), கார்த்திக் (25), சேலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த வேதவன் (22), கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நாகராஜ் (19), சிங்காநல்லூர் அரவாணி கோயில் வீதியை சேர்ந்த ஆகாஷ் (21) மற்றும் சென்னையை சேர்ந்த ஆகாஷ் (21) ஆகியோர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தினேஷ், கோகுல் கிருஷ்ணன், வினோத், கார்த்திக், வேதவன், நாகராஜ் ஆகிய 6 பேரையும் கடந்த 24ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ரயிலை சேதப்படுத்தி பயணிகளின் உடமைகளை திருட திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும், சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஆகாசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த ஆகாசையும் போலீசார் கடந்த 29ம் தேதி மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆகாஷ் மீது பீளமேட்டில் ஆயுதத்தை காட்டி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகியோர் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை சேதப்படுத்தி பயணிகளிடம் திருட சதி செய்த மூளையாக செயல்பட்டதாலும், அவர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கோவை ரயில்வே போலீசார் கடந்த 10 வருடத்திற்கு முன்பு ஒரு வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் தற்போது ரயிலை சேதப்படுத்தி பயணிகளின் உடமைகளை திருட திட்டமிட்ட ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் மீனாட்சி முயற்சி செய்து அவர்களை குண்டாசில் சிறையில் அடைத்துள்ளார்.



