விவாகரத்து வழக்கு கேட்ட ஹன்சிகாவுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்தாலும் அவரது நாத்தனார் மீது பகீர் புகார் கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகை ஹன்சிகா, பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். பின்னர் 2007ல் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார்.
ஹன்சிகாவின் திருமண சர்ச்சை
2010ல் தமிழில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்தார். 2022ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பாக, சோஹைல் கதுரியா தனது தோழியின் முன்னாள் கணவர் என்பதால் ஹன்சிகா கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
முடிவுக்கு வந்த 4 வருட வாழ்க்கை
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு சில காலம் அமைதியாக வாழ்ந்த இந்த ஜோடிக்கு, 2024க்கு பின்னர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து, சமீபத்தில் சட்டப்படி விவாகரத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஹன்சிகா தனது முன்னாள் கணவரின் சகோதரியும், தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கு எதிராக மும்பை திண்டோசி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனது பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் முஸ்கான் பேசிவருவதாக ஹன்சிகா குற்றம் சாட்டியுள்ளார்.
நாத்தனாருக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா
மேலும், இந்த செயலால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கியும், பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், தன்னிடம் நிலுவையில் உள்ள ரூ.27 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தாமல் தவிர்க்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

மற்றொரு பக்கம், முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தனது கணவர் மற்றும் ஹன்சிகா மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ஹன்சிகா, இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்ய மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

