பின்னணி பாடகி சுஜாதா சமீப காலமாக பாடாமல் இருந்து வரும் நிலையில் அவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இசைஞானி கொடுத்த வாய்ப்பு
பாடகி சுஜாதா, கேரளம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே இசை மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார்.
அவரை அறிமுகம் செய்து வைத்தவர் இசைஞானி. கவிக்குயில் படத்தில் காதல் ஓவியம் பாடலை பாடிய அவர், பின்னர் காயத்ரி படத்தில் காலை பனியில் பாடலை பாடினார்.

ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் மீண்டும், இளையராஜா அவரை அழைத்து ஜானி படத்தில் ஒரு இனிய மனது பாடலை பாட வைத்தார். பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.
ரோஜா கொடுத்த ஜாக்பாட்
தொடர்ந்து இளையராஜா கொடுத்த அடுத்தடுத்த வாய்ப்பால், பிரபலமான அவர், மலையாள திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் தமிழ் சினிமாவில் பாடாமல் இருந்த அவருக்கு, ரோஜா படம் மூலம் மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்தார் ஏ.ஆர் ரகுமான்.

புது வெள்ளை மழை பாடல் மீண்டும் சுஜாதாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், தேவா, சிற்பி, வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடி தனி இடத்தை பிடித்தார்.
குறிப்பாக புதிய முகம், முத்து, ஜென்டில்மேன், மின்சார கனவு, அவ்வை சண்முகி, தில் படத்திற்காக தமிழக அரசின் விருதை பெற்றிருந்தார். ஏராளமான கேரள விருதுகளையும் அள்ளியுள்ளார்.
20,000 பாடல்களை பாடி அசத்தல்
பின்னணி பாடகி சுஜாதா, மருத்துவர் கிருஷ்ண மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்வேதா மோகன் என்ற மகள் உள்ளார். அவரும் தற்போது முன்னணி பாடகியாக உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என அனைத்து மொழிகளிலும் கோலோச்சி சுமார் 20,000 பாடல்களுக்கு மேல் பாடி அசத்திய சுஜாதாவுக்கு 2010 ஆண்டுக்கு மேல் கடுமையான குரல் பிரச்சினைகளை மூன்று ஆண்டுகள் சந்தித்தார். பேசுவதற்கே மிகவும் சிரமமாக இருந்ததால், பாடும் வாய்ப்புகளை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து 2013க்கு பிறகு மீண்டும் பாடினார். ஆனால் அதன் பின் அவர் சின்னத்திரையில் உள்ள ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பார்க்கமுடிந்தது.
இனி பாட முடியாத சோகம்
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருது பெற்ற சுஜாதா, சில விஷயங்களை பகிர்ந்தார்.
கடந்த 5 வருடங்களாக தான் எந்த மேடையிலும் பாடவில்லை, அதற்கு காரணம் தொண்டையில் ஒரு பிரச்சனை உள்ளதாகவும், என்னால் முன்பு போல பாட இயலவில்லை என வேதனை தெரிவித்தார்.

அவருக்கு என்ன பிரச்சனை என்பதை முழுமையாக சொல்லவில்லை. இருப்பினும் அவரின் நிலைமை குறித்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பேசிய ஸ்வேதா மோகன், தனது தாய்க்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

