கோவை: பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லையென்றால் படிப்பு பாதிக்கப்படும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் , தனியார் சி.எஸ்.ஆர் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கழிவறைகளை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
இதேபோல கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஐந்து பள்ளிகளுக்கு என மொத்தம் 21 கழிப்பிடங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
சமுதாயத்தில் குறிப்பாக மாணவ – மாணவியருக்கு, அவர்கள் படிக்கின்ற இடங்களில், கழிப்பிட வசதி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. பெண் குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி இல்லாததால் அவர்களுடைய படிப்பு பாதியில் நிற்பது, உடல் நல பாதிப்பு ஏற்படுவது, போன்ற குளறுபடிகள் இருந்த காரணத்தால் தான் ஸ்வச் பாரத் என்ற தூய்மை பாரதம் என்ற மிகப்பெரிய ஒரு திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதன் வாயிலாக பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் இந்த முயற்சியினை முழு மூச்சாக எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் லட்சக் கணக்கான கழிப்பிடங்களை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன்படி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவ – மாணவிகளின் தேவைக்கு ஏற்ப கழிப்பிட வசதிகள் இல்லாத பள்ளிக் கூடங்களில் கழிப்பிடங்களை அமைப்பதற்காக 24/7 AI என்கின்ற பெங்களூரில் இயங்கக் கூடிய கம்பெனியின் உதவியோடு, அரசு நிதியின் வாயிலாக கிளப் 41 என்ற ரவுண்ட் டேபிள் அமைப்பினுடைய தொண்டு நிறுவனத்தின் வாயிலாக நிர்மாலையா என்கின்ற திட்டத்தின் கீழாக இன்று 21 யூனிட்டுகள் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக அந்த நிறுவனத்திற்கும், நிர்மாலியா திட்டத்தை அமல்படுத்துகிற கிளப் 41 அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 5 பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டு திறக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மாநகராட்சிகளுடைய கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.