கோவை: கோவை சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு சுகுணா புட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் மிக பிரபலமாக இருந்து வருகிறது.
இந்த நிறுவனத்தை சுந்தராஜன் மற்றும் சௌந்திரராஜன் சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று
கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், பந்தய சாலை பகுதியில் சுகுணா குரூப் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 9 கார்களில் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 30 க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
இதே போல திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் உள்ள சுகுணா புட்ஸ் அலுவலகத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும்
ஈரோட்டில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.