கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கலகல நிகழ்ச்சிகள், கமகம விருந்துடன் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதர் ஒருவருக்கு அவர் குடும்பத்தார் கொடுக்கும் உதவிகளை விட பன்மடங்கு உதவிகளைச் செய்யும் செவிலியர்களைப் போற்றும் விதமாகவும், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் மே 12ம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உலகம் முழுவதும் செவிலியர்களைக் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் உலக செவிலியர் தினமான இன்று கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியிலும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து செவிலியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிக்கன் பிரியாணி மற்றும் வறுவலுடன் கமகம விருந்து செவிலியர்களுக்கு பரிமாறப்பட்டது.
