கோவை: கோவை சரவணம்பட்டி அருகே நாய்க்குட்டிகளை கல்லால் அடித்து கொன்ற நபரை போலிசார் கைது செய்தனர்.
கோவை மாநகர் சரவணம்பட்டி அடுத்த சிவதங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிச்சு விஷ்ணு என்பவர் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அப்பகுதியிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 6ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள ஐந்தாவது வீதி பகுதியில் ஜிச்சு விஷ்ணு நடந்து சென்ற பொழுது அங்கிருந்த வீட்டின் முன்பாக இரண்டு குட்டி நாய்கள் உட்பட 4க்கும் மேற்பட்ட நாய்கள் படுத்து கிடந்த போது அதனை பார்த்த அவர் திடீரென அங்கிருந்த செங்கல்லை எடுத்து நாய்க்குட்டிகளை கடுமையாக தாக்கியுள்ளார்.அதில் நாய்க்குட்டிகள் படுகாயம் அடைந்து அங்கேயே உயிரிழந்தன. அந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளன.
அந்த சிசிடிவி காட்சியில் விஷ்ணு நாய்க்குட்டிகளை தாக்குவதும் அப்பொழுது ஒரு வாகனம் வரும் பொழுது தாக்குதலை நிறுத்திவிட்டு எதார்த்தமாக நிற்பதும் அந்த வாகனம் கடந்து சென்றவுடன் மீண்டும் அந்த நாய்க்குட்டிகளை தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளது மேலும் இது குறித்து எதிர்புறம் மாடியில் இருப்பவர்கள் கேள்வி எழுப்பும் போது அவர்களிடம் ஏதோ கூறும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து நாய்க்குட்டிகள் இரண்டும் உயிரிழந்து கிடந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க நிர்வாகிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். பின்னர் சரவணம்பட்டி காவல் காவல் நிலையத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய நிலையில் ஜிச்சு விஷ்ணுவை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் போதையில் அதனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

