கோவை: சாய்பாபா காலனி பகுதியில், ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையின் பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சமீபகாலமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் புதிதாக அமைக்கப்படும் சாலைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, மாநகராட்சி வார்டு எண் 69க்கு உட்பட்ட சாய்பாபா காலனியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இன்று, அந்த சாலை வழியாக இரும்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று வந்தபோது, திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.
சாலைகள் தரமாக அமைக்கப்படவில்லை என்றும், அவற்றை அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.