கோவை: கோவை காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டம் மேற்கொண்டனர்.
கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை காமராஜ் பவன் அலுவலகம் முன்பாக செல்வப் பெருந்தைக்கு பண மாலை அணிவித்த போட்டோ உடன் காங்கிரஸ் கட்சியினரே கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 27 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர், இதில் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூரிய பிரகாஷ் , மற்றும் சிங்காநல்லூர் தொகுதிக்கு வேட்பாளராக ஸ்ரீநிதி நாயுடு ஆகியோரை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கையில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடுக்கு சிங்காநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது ஏற்புடையதல்ல எனவும் அதேபோல 27 வயதான சூரிய பிரகாசுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி ஒதுக்கியதும் ஏற்படையது அல்ல என குற்றம் சாட்டிய காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா,காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மற்றும் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கழுத்தில் பண மாலை அணிந்திருந்த புகைபப்டத்தை கையில் ஏந்தி எம் எல் ஏ சீட்டை விற்காதே ! வேட்பாளரை மாற்றிடு என மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நீண்ட நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் அவர்களுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்தவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

