கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் குவிந்த மக்கள் நொய்யல் ஆற்றை வணங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு தினமான இன்று ஏராளமானோர் ஆற்றங்கரைகளில் குவிந்து நீரை வழிபடுவர். இதனால் நாட்டில் மழை பொழிந்து நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி இன்றைய நாள் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதலே ஆற்றங்கரைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் குவிந்த ஏராளமான மக்கள் நொய்யல் ஆற்றை வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
நொய்யல் ஆற்றை வழிபடுவதோடு, புதுமண பெண்கள் தாலி மாற்றி கொண்டனர். பலரும் கன்னிமார் தேவிகளை வழிபட்டனர். மேலும் முன்னோர்களை வழிபட்டு காகத்திற்கு உணவு படைத்து வழிபட்ட மக்கள், படித் துறையில் உள்ள விநாயகர் கோவில் அரச மரத்தடியில் விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.
மேலும் இப்பகுதியில் பல்வேறு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் பக்தர்கள் உணவுப் பொருட்களை நீர் நிலைகளில் கொட்டி வீணடிக்காமல் இருப்பதற்காக, 50 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள், அதனைப் பெற்று ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவளிக்கும் விதமாக அவற்றை சேகரித்து வரும் பணியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது….




