கோவை: இருகூரில் பெண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் இருகூர் விவகாரத்தில் வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் சத்தம் போட்டு சென்றதாக அங்கிருந்த ஒரு பெண்மணி 100 எண்ணிற்கு தகவல் அளித்துள்ளார், அதன் அடிப்படையில் காவலர்கள் அங்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
அந்த கார் சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் வரை வந்துள்ளது என்றும் அங்குள்ள ஒரு பேக்கரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி உள்ளதாகவும் அதில் வாகன எண் தெளிவாக இல்லை மேலும் அந்த சிசிடிவி காட்சியில் பெண் உள்ளே இருந்ததற்கும் தெளிவான பதிவு இல்லை என கூறினார்.
இது தொடர்பாக தற்பொழுது வரை எந்த புகார் அளிக்கப்படவில்லை என தெரிவித்த அவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் வாகன எண் தற்பொழுது வரை தெளிவாக கிடைக்கவில்லை கிடைத்ததும் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

