கோவை: பிரதமரை கண்டித்தும் தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் கோவையில் DYFI, SFI அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் DYFI மற்றும் SFI அமைப்புகள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரதமர் மோடியைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், மோடி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து DYFI மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா பேசியதாவது:
தமிழகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று டெல்லியில் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்திப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசின் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களைக் கட்டாயப்படுத்திக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நரேந்திர மோடியின் வருகையால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, அவரது வருகையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் உடனடியாகத் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். டெல்லியில் போராடிய மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகக் காவல்துறை மக்களின் போராட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்குவதில்லை. சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்குகின்றனர். இன்றுகூட போராட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. போராடும் மாணவர்களைத் தமிழக அரசு ஒடுக்கக் கூடாது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டுகிறோம். எனவே, அவர்களும் பதவி விலக வேண்டும். தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.
டெல்லியில் ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தியும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துப் பேசி வருகிறார். ஆனால், போராட்டக்காரர்களைக் கைது செய்யும் காவல்துறையினர், அதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூறுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காவல்துறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சதி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவதை ஏற்க முடியாது. வாக்குரிமை இழந்தவர்கள் தங்களது உரிமையை மீட்டெடுக்கப் போராடுகின்றனர்.
ஏராளமானோர் வாக்குரிமையை இழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசு போராட்டங்களை முடக்க முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். இல்லையெனில், அரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.






