கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப் பாம்பால் பரபரப்பு நிலவியது.
வீட்டில் இருந்த கோழியைத் தனது பிடியில் சிக்க வைத்து, விழுங்குவதற்குத் தயாராக இருந்த அந்தப் பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வனத்துறையினருக்குச் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மிகவும் சாதுர்யமாகவும், பாதுகாப்பாகவும் அந்த மலைப்பாம்பைப் பிடித்தனர். பின்னர் பாம்பின் பிடியில் இருந்து கோழி உயிருடன் மீட்கப்பட்டது.
பிடிபட்ட மலைப்பாம்பு காயங்கள் ஏதுமின்றி ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை அருகில் உள்ள பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விடுவிக்க கொண்டு சென்றனர்.

