கோவை: கோவையில் ரேபிஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதித்த 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தினமும் வாகனங்களில் செல்வோரையும், தனியாகச் செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்தும் இந்த தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிஷன் ரேபிஸ் என்ற அமைப்பினர் கோவையில் செயல்பட்டு வரும் ஹியுமன் அனிமல் சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து கோவையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோவை மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் 45 நாய்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கலெக்டர் பவன்குமார், “உள்ளாட்சி அமைப்புகளில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் தெருநாய்கள் பிறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களே கவனம்

ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் எது? என்று அடையாளம் காண்பதில் மக்களுக்கு சிரமம் உள்ள நிலையில், மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை முழு வீச்சில் தொடர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெருநாய்கள் மட்டுமல்லாது வளர்ப்பு நாய்களும் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்களைக் கடிப்பதாலும், அதன் நகக்கீறல்கள் மூலமாகவும் பொதுமக்கள் பலியாவது நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே இந்த விஷயத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தெருநாய்கள் அதிகமுள்ள பகுதிகளில் குழந்தைகளை தனித்து விடுவதையும், கடைகளுக்கு அனுப்புவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். நாய்கள் கடித்தாலோ, கீறினாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட அல்லது ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் நாய்கள் குறித்து 9843789491 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.