கோவை: கோவையில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் 51 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ரோஜ்கார் மேளா நிகழ்ச்சி இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. 40 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் (தனியார்) இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி நியமன அணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் தபால் துறை, வங்கி துறை, ரயில்வே மற்றும் உள்துறை ஆகிய மத்திய அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற 51 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர், 2022 ஆம் ஆண்டு முதல் இந்த பணியாணைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் பணி ஆணைகளை தற்பொழுது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு முக்கிய துறைகளில் பணிகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது என்றும் 2047 ஆண்டு நாட்டின் நூறாவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் பொழுது வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும் அதற்கான பாதையை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் டெல்டா மாவட்ட விவசாயிகள் மழையினாலும் தகுந்த வசதிகளை ஏற்படுத்தி தராததாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். இது சம்பந்தமாக அமைச்சர் சக்கரபாணி பேசும் பொழுது மத்திய அரசு மீதுதான் குற்றம் சாட்டியதாகவும் கூறினார். பொறுப்பில்லாத அரசாக திராவிட மாடல் அரசு இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் படும் துயரமே எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.
இதனை பல்வேறு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார். சேமிப்பு கிடங்கை கட்டுவது தொடர்பான எந்த ஒரு திட்டமிடலும் கிடையாது என்றும் டெல்டா காரர் என்று கூறும் மாநிலத்தின் முதல்வர் பெயரளவிற்கு மட்டும்தான் அந்தப் பெயரை பயன்படுத்துகிறாரே தவிர டெல்டா விவசாயிகளுக்கு இந்த அரசு துரோகம் விளைத்து வருவதாக தெரிவித்தார்.
பிரதமர் வாக்குறுதிகளை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பதை எங்களால் கூற முடியும் என்றும் ஜி எஸ் டி யை குறைப்போம் என்று கூறி அதன்படி குறைத்து உள்ளார் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கூட மாநில அரசிடம் நான், சொன்னீர்களே செய்தீர்களா என்று கேட்டதற்கு சொன்னதை காட்டிலும் அதை மீறி செய்து கொடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவற்றை செய்யவில்லை என்று குறிப்பிட்டு அதற்கு டெல்டா விவசாயிகளின் கண்ணீரே சாட்சி என தெரிவித்தார்.
மது விற்பனை அதிகரிப்பு குறித்தான கேள்விக்கு அமைச்சர் கூட வருடம் வருடம் உயர்கிறது என்று தான் கூறியிருக்கிறார் என்றும் மக்களுக்கு எது செய்தாலும் வருமானம் டாஸ்மாக்கில் இருந்து தான் வருகிறது என தெரிவித்தார். 90% ஆண்கள் குடிப்பழக்கத்தால் இறப்பதால் பல்வேறு விதவைகள் உருவாகிறார்கள் என்றும் இளம் விதவைகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அவர்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் நான் பேசியும் தற்பொழுது வரை அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். இன்னும் ஆறு மாத காலங்கள் தான் தேர்தலுக்கு உள்ளது அதுவரை அமைச்சர்கள் எதில் டெண்டர் விடலாம் எதில் காசு பார்க்கலாம் என்று இருந்தால் உண்மையான பிரச்சனை அவர்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
பருவமழை குறித்தான கேள்விக்கு பருவமழைத் தொடங்கி விட்டது அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறிச் சென்றார்.


