Header Top Ad
Header Top Ad

டெல்லி புறப்பட்ட செங்கோட்டையன்- கோவையில் செய்தியாளர்களிடம் கூறிய பதில்!

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று டெல்லி புறப்பட்ட நிலையில் மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி புறப்பட்டார்.

அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மனம் சரியில்லாததால் ஹரித்வார் ராமர் கோவிலுக்கு செல்வதாக தெரிவித்தார். வருகின்ற ஒன்பதாம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை என தெரிவித்த அவர் கோவிலுக்குச் சென்று வந்தால் கொஞ்சம் மனம் நிம்மதியாக இருக்கும் என எண்ணுவதாக தெரிவித்தார்.

அதிமுக குறித்து என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை என்றும் டிடிவி தினகரன் பேசியதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். நல்லதுக்கு நாம் செல்கிறோம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடுத்த முடிவுக்கு கருத்து சொல்ல முடியாது என்றும் காலம்தான் பதில் சொல்லும் எனவும் தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஹரித்வாரில் ராமரை தான் சந்திக்க செல்கிறேன் என்றும் வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றும் ராமரை சந்தித்து விட்டு பிற்பகல் மீண்டும் தமிழகம் திரும்புவதாக தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றாக சேர்ந்தால்தான் கட்சி நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாகவும் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் தான் இருந்ததாகவும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தன்னை சந்தித்து சென்றதாகவும் தெரிவித்த அவர் நிர்வாகிகள் யாராவது சந்தித்தார்களா என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்தார்.

Advertisement

தன்னுடைய கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர் என்றும் பாஜகவில் கூட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச் ராஜா உள்ளிட்டோர் எல்லாம் வரவேற்று உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் தன்னை சந்திக்க வருவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல என்றும் தெரிவித்தார்.

அதிக கோவில்கள் இருக்கும் பொழுது ஹரித்வார் க்கு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு ராமாயணத்தில் இருக்கும் ராமர் கம்பராமாயணத்தில் இருக்கும் அந்த ராமரை தான் சந்திக்க செல்கிறேன் என கூறிச் சென்றார்.

Recent News