கோவை: கோவை விமான நிலையத்தில் 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் இடையே விமானத்தில் தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத் துறை மற்றும் விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதில் உடமைகளுக்குள் மறைத்து வைத்து 1,425 சிகரெட் பெட்டிகள், 138 இ-சிகரெட்கள், 6 லேப்டாப்கள் ஆகியவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதன் மொத்த மதிப்பு ரூ.28.50 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சுங்க வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், இவற்றை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.