கோவை: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்பைப் பிடிக்க முயன்ற கோவையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர், நாகப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு புகுந்துவிட்டால், உடனே பொதுமக்களுக்கு ஞாபகத்திற்கு வருபவர் சந்தோஷ் தான்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவிக்கும் சேவையைச் செய்து வந்தார் இவர். ஏற்கனவே நமது இணைய தளத்திலும் சந்தோஷ் பாம்பு பிடித்தது குறித்த செய்திகளை பதிவிட்டுள்ளோம்.
அந்த வகையில், தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்தோஷ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு சென்ற சந்தோஷ், அந்த நாகப் பாம்பைப் பிடிக்க முயன்றார்.
அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சந்தோஷ்க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது இறப்பு வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.