கோவை: கோவையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
கோவை மாவட்டம், ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக சேக்கிழார் அரங்கத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
இதனை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட்பட பல்வேறு அதிகாரிகள் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள். பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 53 வகையான போட்டிகள் மாநில முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.
கோவையில் நேரு விளையாட்டு அரங்கம் மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, சங்கரா கல்லூரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, சி.ம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, வேளாண்மை பல்கலைக்கழகம், வனக் கல்லூரி, கௌமராலயா மடாலயம், அரசு தொழில்நுட்ப கல்லூரி, இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி என 13 இடங்களில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 முதல் 10.09.2025 வரை நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1768 அரசு ஊழியர்கள் 20,915 கல்லூரி மாணவ மாணவியர்கள், 22,314 பள்ளி மாணவ
மாணவியர்கள், பொதுப்பிரிவில் 7,677 நபர்களும், 902 மாற்றுத்திறனாளி ஆண்களும் என மொத்தம் 53,376 நபர்கள் இணையத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட அளவில் முதலிடத்திற்கு 3000ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 2000 ரூபாயும் மூன்றாம் இடத்திற்கு 1000மும் பரித்தொகையாக வெற்றிப்பெற்றவர்களின் வங்கி கணக்கில் வரவைக்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகளும், தனி விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை பெற்றவர்களும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பபடுவார்கள்.
மாநில போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1,00,000மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.75,000மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும்.