கோவை: பள்ளி மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிள் வழங்கப்படும் என்று அமைச்சர் சம்பத் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கும் நிகழ்வை சென்னையில் முதலமைச்சர் விஜய் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் சம்பத் குமார் குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவை மாவட்டத்தில் உள்ள 1369 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 879 மாணவ மாணவிகள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கேக் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பெரியார் அறிவுலக விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும் முறையான விசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சாலை பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் சில பகுதிகளில் வேலை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அவர் மருதமலை சாலைகள் எல்லாம் கனரக வாகனங்கள் செல்லும்படி சாலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு தினமும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தினம் தோறும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் கோவையில் சாலைகள் தோண்டப்படும் பொழுது அங்குள்ள மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு தான் சாலை தோண்டப்படும் என்றும் அது எப்பொழுது சரி செய்யப்படும் என்ற தேதியையும் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர ஆட்சியில் மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் பயன்படுத்துவோம் என்றும் எங்கும் முறைகேடாக சென்று சேராது என்றும் கூறிய அவர் கடந்த முறை சைக்கிள்களை எந்த விலையில் கொள்முதல் செய்தார்களோ அதனை காட்டிலும் குறைந்த விலையிலேயே ஆர்டர் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
5,32,000 சைக்கிள்கள் வினியோகம் செய்ய இருப்பதாகவும் அதற்கு 277 கோடி ரூபாய் பட்ஜெட் என்றும் குறிப்பிட்ட அவர் அந்த தொகைக்கான தகுதியான நிறுவனமாக இருக்க வேண்டும் ஐந்தாறு நிறுவனங்கள் மட்டுமே அந்த டெண்டரில் பங்கேற்று உள்ளது அதில் தகுதி உடைய நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். வெளிப்படை தன்மையுடன் தான் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் செல்லக்கூடிய டெண்டர் இல்லை என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சைக்கிள் டெண்டர் தொடர்பாக அவதூறு பரப்ப அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு தரமான சைக்கிள்கள் வழங்கப்படும் கடந்த ஆட்சியை காட்டிலும் குறைந்த விலையில் சைக்கிள் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார் மேலும் முதல்வர் விருப்பப்படி அது ஸ்போர்ட்ஸ் மாடல் சைக்கிளாக இருக்கும் என்றும் அதனுடன் ஹெல்மெட் வாட்டர் பாட்டில்களும் வரும் என்றும் குறிப்பிட்டார்.
மருதமலை சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பது தொடர்பான கேள்விக்கு அங்கு தான் ஆய்வுக்கு செல்ல இருப்பதாகவும் சாலையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.





