கோவை: கொடிசியா அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் மூவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் ராம்ஜி நாகப்பாண்டி (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரது நண்பர்கள் அல்லி நகரம் நவீன் (19), கரூர் பாப்பையன்பட்டியை சேர்ந்த சேஷாத்ரி (19). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
நண்பர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே பைக்கில் கொடிசியா ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ராம்ஜி நாக பாண்டி ஓட்டினார்.
நள்ளிரவு 12.15 மணியளவில் கொடிசியா அருகே சென்றபோது அவர்களது பைக் சாலை தடுப்பு கம்பியில் பைக் மோதியது.
இதில் 3 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பைக் ஓட்டி சென்ற ராம்ஜி நாகப்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நவீன், சேஷாத்ரி ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



