கோவை: கேமிரா, டிரோன்கள் மூலம் சிறுத்தை குறித்து தொடர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும், பகிரப்படும் புகைப்படங்களில் இருப்பது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பீடம்பள்ளி, சூலூர், கண்ணம்பாளையம், வெள்ளலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தையின் நடமாட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் அப்பகுதிதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையின் பல்வேறு இடங்களில் கேமிராக்களை அமைத்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சிறுத்தையை நேரடியாகப் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வரும் தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் இருசக்கர வாகனங்களில் நகரத்திற்குச் சென்று இரவில் வீடு திரும்புகிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் பயத்தில் உள்ளனர்.” என்றனர்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் இடங்களில் இரவு நேரங்களில் 8 கேமிரா மற்றும் டிரோன்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மேலும், பொதுமக்கள் தெரிவித்த கால் அடையாளங்கள் சிறுத்தையின் கால் தடங்கள் அல்ல. அவை நாய்களின் கால் அடையாளங்கள். சிறுத்தை வனப்பகுதிக்கு திரும்பிச் சென்றிருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.



