கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசிடம் கோவை மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வேலாண்டிபாளையம், சரவணம்பட்டி, போத்தனூர் மேட்டூர், காளப்பட்டி அருகே உள்ள நேரு நகர் ஆகிய பகுதிகளில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் கூடுதல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க 2020ம் ஆண்டு முதல் பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தை மாநகராட்சி அணுகி வருகிறது.
தற்போது கோவை நகரில் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சுகாதார திட்ட விதிகளின்படி, 50 ஆயிரம் மக்களுக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் இருக்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை 17.9 லட்சம் ஆக உள்ளது. இதனால் குறைந்தது 35 மையங்கள் தேவைப்படுகிறது. ஆனால் 2022ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, நகரில் சுமார் 45 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
வெள்ளக்கிணறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் தற்போது சுமார் 1.2 லட்சம் மக்களுக்குச் சேவை அளித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நேரு நகரில் புதிய மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கே.கே.புதூர் மற்றும் கவுண்டம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் தலா 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குச் சேவை அளித்து வருகின்றன. வேலாண்டிபாளையத்தில் புதிய மையம் அமைந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சரவணம்பட்டியிலும் இதே நிலை நீடித்து வருவதால், அப்பகுதி மக்கள் வெள்ளக்கிணறு அல்லது விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களை நாடி வருகின்றனர். இதனால் கிருஷ்ணாபுரத்தில் புதிய மையம் அமைக்க மக்கள் கேட்டுள்ளனர். எனவே அந்த இடங்களில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்க அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சில நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கே.கே. புதூர் மற்றும் சீரநாயக்கன்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ரூ.1.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டிடங்கள் மக்கள் எண்ணிக்கையை சமாளிக்க போதுமானதாக இல்லாததால், புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, பழைய கட்டிடங்கள் துணை மையங்களாக செயல்படும்.
மேலும், சவுரிபாளையம் மற்றும் நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ரூ.1.7 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட நிதி கோரப்பட்டுள்ளது.
அதேபோல, கல்வீரம்பாளையம், குறிச்சி மற்றும் ராமநாதபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ரூ.75 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

