கோவை: தை மாத பெளர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு செல்லும் பாதை திறக்கப்பட்டது.
தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவிலுக்கு செல்லும் நடை இன்று சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டது.
கோவையில் உள்ள வெள்ளியங்கிரி சிவன் கோவில் தென்கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. வருடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் இங்கு உள்ள ஏழு மலைகள் ஏறி மலைக் கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சுயம்பு வடிவில் உள்ள சிவனை காண்பதற்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் தைப்பூசம் மற்றும் தை பௌர்ணமி தினமான இன்று முதல் நான்கு மாதங்களுக்கு வெள்ளிங்கிரி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூண்டி அடிவாரத்தில் குவிய துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வனத்துறையினர் பாதுகாப்புடன் மலை கோவிலுக்கு செல்லும் பாதை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ நாமங்களை முழங்கியவாறும் அரோகரா முழக்கத்துடன் மலையேறி சிவனை வழிபட சென்றனர்.

இன்று முதல் நான்கு மாதங்களுக்கு மலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான போலிசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக்குழுக்களும் தன்னார்வலர்களும் உள்ளனர்.
பூண்டி அடிவாரத்திலேயே பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும்.

