கோவை: வெளி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் பிரச்சனைகள் களையப்படும்.
வெளி பகுதி ரேஷன் அட்டைதாரர்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் களையப்படும் என உணவு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உணவு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி மாவட்டங்களை சார்ந்த உணவு வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அந்த ஆய்வுக் கூட்டத்தில் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், இந்த ஆய்வுக் கூட்டத்தில் நான்கு மாவட்டங்களில் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் 98% பணிகளை அதிகாரிகள் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார்.
உணவு பொருட்களை 98% க்கும் மேல் நுகர்வோர்கள் வாங்கி இருப்பதாகவும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களில் 90% மேல் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஓரிரு குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். தாயுமானவர் திட்டத்தின் மூலமாக 98 சதவிகிதத்திற்கும் மேல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதை அதிகாரிகள் செய்து வருவதாகவும் உணவு ஆணையத்தை பொருத்தவரை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவதை ஒவ்வொரு மண்டல ஆய்விலும் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார். முதல்வர் எதிர்பார்த்ததை செய்கின்ற அளவிற்கு உணவு ஆணையம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த துறையில் அரசு தனிகவனம் செலுத்தி வருவதால் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் தயார் நிலையில் இருப்பு இருப்பதாக தெரிவித்தார். பகுதி நேர ரேஷன் கடைகளை மக்கள் அதிகம் கேட்பதாகவும் அது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சில இடங்களில் திறந்து வைக்கப்பட்டிப்பதாகவும் சில இடங்களில் இடங்களை தேர்வு செய்வதற்கு கால தாமதங்கள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் வேயிங் மிஷினை வைக்கும் காலதாமதம் ஏற்பட்டதாகவும் ஆனால் தற்பொழுது அதுவும் சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்வதிலும் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை என தெரிவித்த அவர் இது சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த பிரச்சனைகளை களைய முடியும் என கூறினார்.