கோவை: கோவையில் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக காரை எடுத்துக்கொண்டு மதுபோதையில் பயணித்த நண்பர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூவரும் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
அவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் ஹரீஷுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அனைவரும் மது அருந்தியதாக தெரிகிறது.
மேலும் அங்கு வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த வேறொருவரின் காரை எடுத்து கொண்டு சிறுவாணி சாலையில் பயணித்துள்ளனர். ஐந்து பேரும் மது அருந்திய சூழலில் காரை பிரகாஷ் ஓட்டியுள்ளார்.
அதிவேகமாக கார் சென்று கொண்டிருந்தபோது பேரூர்- பச்சாபாளையம் இடையே செட்டிபாளையம் பிரிவை கடந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவற்காக சாலையிலிருந்து பிரகாஷ் காரை ஒதுக்க முற்பட்டுள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர புளியமரத்தின் அருகே இருந்த மேஜையில் மோதி புளியமரத்திலும் அதிமேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆகியும் ஹரீஷ்,பிரகாஷ் மற்றும் அகத்தியன் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பிரபாகரன் மற்றும் சபா ஆகியோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சபா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வரும் பிரபாகரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிறந்தநாளை கொண்டாட சென்ற இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


