கோவை: 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு பேருந்து நடத்துனரான வால்பாறை கக்கன் காலனி பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவரை மீண்டும் பணியில் சேர்க்க ரூபாய் 5,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதை கொடுக்க விரும்பாத இஸ்மாயில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து இரசாயனம் தடவிய பணத்தை சண்முகசுந்தரத்திடம் இஸ்மாயில் கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சண்முகசுந்தரத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழக அதிகாரி சண்முகசுந்தரத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்து நீதிபதி சர்மிளா தீர்ப்பு அளித்துள்ளார்.



