கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் டிரெச்சர் கொடுக்காததால், வயது முதிர்ந்த நோயாளியை அவரது உறவினர்கள் இழுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களில் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வந்து சிகிச்சைபெறும் மருத்துவமனையாக உள்ளது.
கோவை அரசு மருத்துவமனை. இங்கு வரும் நோயாளிகளை ஊழியர்கள் கண்ணியக்குறைவாக நடத்துவதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் உள்ளது.
மேலும், முறையான அடிப்படை வசதிகள் இல்லை, மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் ஸ்டிரெச்சர் கொண்டுவராததால் வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளி நோயாளி ஒருவரை அவரது உறவினர்கள், தோளில் சாய்த்தபடி இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், 2 மணி நேரமாக காத்திருந்தும் உதவி கிடைக்காததால் முதியவரை இவ்வாறு இழுத்து வரும் நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் குமுறுகின்றனர்.
தள்ளாத வயதில், பார்க்கவே பரிதாப நிலையில் இருக்கும் முதியவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவசரகதியில் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலங்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும் போதும், “ஆதாரமில்லாமல் பேசாதீர்கள்” என்று கூறிச்செல்வார்.