கோவை: சிங்காநல்லூர், சரவணம்பட்டி, பீளமேட்டில் தனியாகச் சென்ற பெண்களிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கோவை இருகூர் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 80). இவர் நேற்று மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தார்.
அங்கு உள்ள தனியார் மில் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து, திடீரென நாகரத்தினத்தின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து நாகரத்தினம் வீட்டிற்கு சென்று மகளிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பீளமேடு
பீளமேடு அருகே உள்ள சிவில் ஏரோடி ராம், பி.எம்.ஆர். லேஅவுடை சேர்ந்தவர் அபிராம சுந்தரி (வயது 43). இவர் நேற்று மாலை அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராம சுந்தரி, பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணம்பட்டி
நீலகிரியை சேர்ந்த வினயா (22), கோவை சரவணம்பட்டி லட்சுமி நகர் பகுதியில் தோழிகளுடன் தங்கியிருந்து ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சமீபத்தில் வினயா, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த வாலிபர் ஒருவர், அவரது கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றார்.
அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அந்த வாலிபர் தப்பித்து விட்டார்.
இதுகுறித்து வினயா, சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போனை பறித்த நபர், கோவை அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த வசந்தகுமார் (20) என கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் தனியாகச் செல்லும் பெண்கள் அடிக்கடி குறிவைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.