அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று அப்போது தெரியும்- கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி…

கோவை: அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று தேர்தல் எண்ணிக்கைக்கு பிறகு தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் காலத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.

Advertisement

அப்பொழுது பேசிய அவர் ஒவ்வொரு பூத்திற்கும் உட்பட்ட பகுதியில் அரசின் சார்பில் செய்யப்பட வேண்டிய கோரிக்கைகளை படிவத்தில் பூர்த்தி செய்து கழகத்திற்கு அனுப்ப வேண்டும் திமுக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் நேரடியாக சந்தித்து எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதே சமயம் வாக்காளர்கள் ஏதேனும் கோரிக்கைகளை வைத்தால் அதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார். கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளை இந்த முறை பெற வேண்டும் எனவும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குறைந்தது 50 சதவிகிதம் வாக்குகளை பெற வேண்டும் இளைஞர் அணி மகளிர் அணி என அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் முன்னெடுக்கக் கூடிய வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பை முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இது துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு அதன் அடிப்படையில் அந்த வாக்கு சாவடிக்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களையும் முழுமையாக வீடு வாரியாக சென்று சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துக் கூற இருப்பதாக தெரிவித்தார். இந்த பணிகள் இன்று துவங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

கோவை மாவட்டத்தில் தனிகவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக கூறிய அவர் செம்மொழி பூங்கா தற்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என்றும் ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது வாக்காளர்கள் என்று தெரிவித்தார்

எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுக்கூட்டத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொரு கட்சியும் அவர்களது கருத்துக்களை கூறுவார்கள் என்றும் அவர்கள் கூறுவதற்கு உரிமைகளும் உண்டு என தெரிவித்த அவர் அது அவருடைய ஆசை 2026 வாக்கு எண்ணிக்கையின் பொழுது தான் என்ன ரிசல்ட் என்பதை அவர் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். மேலும் எங்களிடம் குறைகளை கூறினால் அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனையை முன்னெடுத்து வருவது தொடர்பான கேள்விக்கு, பாஜக அரசை பொருத்தவரை தமிழக மக்களிடம் கூறுவதும் அவர்களின் எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது என்பதை தெரிந்து கொண்டு, அமலாக்கத்துறை வருமான வரித்துறை தற்பொழுது தேர்தல் ஆணையம் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தமிழ்நாடு என்பது பெரியார் மண் அறிஞர் அண்ணாவின் மண் கலைஞர் மண் எனவே பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஈடேறாது என தெரிவித்தார். என்ன செய்தாலும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடந்து முடிந்தது தான் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என தெரிவித்தார். அந்த தேர்தலில் கிடைத்த வெற்றி தான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் கிடைக்கக்கூடிய வெற்றி எனவும் கூறினார்.

ஒரு கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் குறிப்பாக சென்னையில் அதிகப்படியான போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என்று அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவ்வாறு கூறுவதே தவறு என்றும் எந்த அடிப்படையில் அவர்களை போலி வாக்காளர்கள் என்று எடுத்துக் கொள்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். ஒரு இடத்தில் இருப்பவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கலாம் சிலர் இறந்து போயிருக்கலாம் அவர்களை எல்லாம் போலி வாக்காளர்கள் என்று எவ்வாறு எடுத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழுப்பிய அவர் அதனை தேர்தல் ஆணையம் தான் முறையாக செய்திருக்க வேண்டும் என கூறினார்.

எனவே போலி வாக்காளர்கள் என்று கூறுவது ஏற்புடைய சொல் அல்ல என்று தெரிவித்தார். மேலும் இரட்டை பதிவுகள், இறந்தவர்களின் பெயர்களெல்லாம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் வாக்கு சதவிகிதம் கூடத்தான் செய்யும் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நியாய விலை கடைகள் இருந்தும் நியாய விலை கடைகள் இல்லை என்று விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு, சிலர் தெரிந்து கூறலாம் சிலர் தெரியாமல் யாரோ கூறுவதை வைத்து கூறலாம் என்றும் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு விஷயத்தை கூறினால் ஒரு முறைக்கு இரண்டு முறை சரி பார்ப்பேன் முழுமையான விவரங்கள் கையில் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து தான் கூறுவேன் என்றும் அவர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார் அது யாரோ சொல்லியதை வைத்து சொல்லி இருக்கலாம் முழுமையாக அதனை ஆராய்ந்து சொல்லி இருக்கலாம், ஒரு கட்சியை சார்ந்தவர் ஒரு விஷயத்தைப் பேசும் பொழுது முழுமையாக தெரிந்து கொண்டு பேசுவது தான் வரக்கூடிய நாட்களில் நல்லதாக இருக்கும் மக்களும் அதை தான் எதிர்பார்ப்பார்கள் எதையுமே தெரியாமல் A4 சீட்டை கையில் கொடுத்தால் அதை அப்படியே படிப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.

மேலும் விஜய் திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி இருந்தது தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் அனைத்து காலங்களிலும் ஒவ்வொரு முறையும் திமுகவை தான் ஒழிப்பேன் என்று கூறுவார்கள், பழைய கால வரலாறுகளை எடுத்தால் கூட அவர்கள் போட்டியாக நினைப்பது திமுகவை தான் அவ்வாறு திமுகவை போட்டியாக நினைத்தால் தான் தங்களால் வளர முடியும் என்பது அவர்களுக்கான குறிக்கோளாக கையில் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் எந்தக் காலமும் திமுகவை வீழ்த்தி விட முடியாது விரித்து விட நினைப்பவர்கள் அவர்கள்தான் வீழ்வார்களே தவிர திமுக என்பது 75 ஆண்டு காலம் மக்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சென்ற இயக்கம் என்றார். மேலும் முதல்வர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார் கோவையிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.

கோவையில் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு கூட ஆள் இல்லை என்று சிலர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு அவ்வாறு எப்படி கூற முடியும் முதலமைச்சரும் துணை முதலமைச்சர் கோவைக்கு நேரடியாக வருகை புரிந்து பல்வேறு திட்டங்களை சேர்க்கிறார்கள், அமைச்சர்களும் வருகை புரிந்து பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள் என தெரிவித்தார். பாதாள சாக்கடை திட்டம் கடந்த ஆட்சியில் செய்யவில்லை என்பதால் இந்த ஆட்சியில் அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு தார் சாலைகள் போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் இருந்த சாலைகளும் அடிப்படை கட்டமைப்புகளும் மேம்படுத்தாததால் இந்த ஆட்சியில் அந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதிமுறையாக கோவையில் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, கோவையில் என்னென்ன வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பரிந்துரை செய்கிறார்கள் என்றும் பிறகு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்து நிர்வாக பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். கோவையில் முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணிப்பதில் அரசு கவனமாக இருப்பதாக தெரிவித்தார்.

ஒண்டிப்புதூர் கிரிக்கெட் மைதானம் குறித்தான கேள்விக்கு, அது மக்களிடம் அறிவிக்கப்பட்ட திட்டம் எனவே நிச்சயமாக அந்த திட்டம் நிறைவேறும் அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை எனக் கூறினார். சென்னைக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவிலான ஒரு கிரிக்கெட் மைதானம் கோவையில் தான் அமைவதாகவும் கூறினார்.

தேர்தலுக்காக தான் திட்டங்களை திமுக அறிவிக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, ஐந்தாண்டு காலம் ஒரு அரசாங்கம் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது, கடந்த வருடம் தான் லேப்டாப் திட்டம் அறிவித்தோம் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது அதற்கான டெண்டர் பணிகள் முடிந்து லேப்டாப்புகள் தயாரிக்கப்பட்டு அது வழங்கப்பட இருப்பதாகவும், எனவே ஒரு அறிவிப்பு என்பது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் எல்லாம் முடிந்த பிறகு வழங்கப்படும் என தெரிவித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒருமுறை வந்து கொண்டு தான் இருக்கும் அரசின் திட்டம் என்பது மக்களுக்கு வளர்ச்சியை கொண்டு சேர்க்கின்ற திட்டம் என்றார். அதேபோன்று விடுபட்ட மகளிர் உரிமைத் தொகையும் முதல்வர் துவங்கி வைக்க இருப்பதாகவும் யாரிடமெல்லாம் அணுக்கள் பெறப்பட்டதோ அதில் தகுதி உடைய மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

அரசை பொருத்தவரை எந்த திட்டங்களும் உரிய காலத்திற்கு முன்பு சேர்க்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் கட்டளை அதன்படி தான் அனைத்து துறைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கோவையும் அவ்வாறுதான் வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவித்தார்.

Recent News

விதை சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம்- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று...

Video

Join WhatsApp