கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் டயரில் சிக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது பைக்கில் வேலைக்கு செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று வேலைக்கு சென்ற பரத் அவ்வழியாக வேகமாகச் சென்ற தனியார் பேருந்தை முந்திச்செல்ல முயன்றார்.
இதில் விபத்தில் சிக்கிய பரத்திற்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
“கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தங்களது சுய லாபத்திற்காக அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் இச்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் பலி ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நிர்வாகமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ காட்சிகள்…