கோவை: கோவையில் துணை ஜனாதிபதி நிகழ்ச்சி கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பை மீறி, ஸ்கூட்டரில் புகுந்த இளைஞர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று முதன் முறையாகக் கோவை வந்தார். கோவையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அதன்படி, டவுன்ஹால் அருகே உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவிக்கச் சென்றார்.
அந்த பகுதியில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். துணை குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் (TN 66 AQ 4740) வந்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக அந்த இளைஞர்கள் இருவரும், போலீஸ் தடுப்பை மீறி திடீரென துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி கூட்டத்திற்குள் புகுந்தனர். சுதாரித்துக்கொண்டு போலீசார் அவர்களைப் பிடிப்பதற்கு முன் தங்களது வாகனத்தில் ‘சிட்டாய்’ பறந்தனர்.

அந்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் போலீசார் பாதுகாப்பு குறைபாடு செய்ததாக பாஜக.,வினர் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




